காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேதனைகள் தொண்டைக்குழி வரையிலும் இன்பங்கள் முகம் முழுவதும் இருந்த காலம்

நிகழ்வு : NITTFEST - 2007
பெற்று தந்தது : முதல் பரிசு

தலைப்பு :

கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலைப்பற்றிய உங்கள் கவிதை

குருதி வெள்ளம் ஆறாயோடும் கரையோரம்
மனித உயிர்கள் உடலைபிரியும் வலிபொறுக்காமல்
கதறும் ஓலம் எங்கும் எதிரொலித்தது

அந்த போர்களத்தில் அவனும் மற்றவர்களை
போல் உயிரை பணயம்வைத்து போராடி
பிற உயிர்களை பறித்துக் கொண்டிருநதான்

அவனிருப்பது இந்தியாவின் வடமூலை யென்றாலும்
அவன் மனம் மட்டும் தென்மூலையின்
ஓர்குடிசையில் பிரசவ வலிபொறாமல் துடிக்கும்
தன் மனைவியை நினைத்துக் கொண்டிருந்தது

திடீரென்று எங்கிருந்தோ பாய்ந்து வந்த
குண்டு அவன் இதயத்தை பதம்பார்த்தது.
மனத்திரையில் அவன்மனைவியின் முகம் மெல்லமங்கியது
சிறிது நேரத்தில் குடிசையிலிருந்து வெளியே
வந்த ஆயா, "ஆண் குழந்தை " என்றாள்

" பிறப்பு முதல் இறப்பு
வரை தாங்கி சுமக்கும்
தாய்திருநாட்டை தட்டிப்
பறிக்க வந்தவனின்
தலை எடுத்துக் கொண்டிருந்தனர்
தங்கள் தலையை அடகுவைத்து...!

உருண்டோடிய தலைகளில்
உதிர்க்கப்பட்ட உதிரங்கள்
வெள்ளமென பெருகி
ஓடிக்கொண்டிருந்தது..!

ஊடுருவலுக்கு உகந்ததாய்
அமைந்த வடமூலையில்
வாட்டி வதைத்துக்
கொண்டிருந்தார்கள்
உள்ளே நுழைந்தவர்களை..!

தாய்மண்ணிற்கு தன்னை
கொடுக்க முனைந்தாலும்
மாங்கல்யம் கொண்டு
மணமுடித்த தன்னவளை
எண்ணிப்பார்த்து
உலகைவிட்டு அனுப்பிக்
கொண்டிருந்தான் ஒருவன்......!

விரட்டிப் பிடித்து
உயிரை எடுத்து
தாய்மண்ணின் மானம்
காத்தாலும் நினைவுகள்
ஏனோ ஈருயிராய்
துடித்துக் கொண்டிருக்கும்
அவளையே தொடர்ந்தது...!

விலகிப்போன நினைவுகளில்
கொஞ்சம் விலகியும்
இருந்தான்...!

நெஞ்சை துளைக்கும்
குண்டொன்று
அவனுள் பாய்ந்தது
விலகியிருந்த நேரத்தில்...!

எண்ணங்களில் அவளின்
நினைவுகள் இருந்தும்
தன்நிலை தடுமாறி
சாய்ந்து கொண்டிருந்தான்..!

மெல்ல மெல்ல
நினைவுகள் நீங்கி
பிம்பங்கள் பின்னோக்கி
பயணித்தது..!

நினைவுகளில் இருந்தவள்
வலியோடு வழியொன்றை
கண்டாள்...!
வழிகளோடு வந்தவளை
உலகுக்கு கூறினாள்
மருத்துவதாய்
ஆண்மகனென்று...! "