காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேதனைகள் தொண்டைக்குழி வரையிலும் இன்பங்கள் முகம் முழுவதும் இருந்த காலம்

நிகழ்வு : NITTFEST - 2007
பெற்று தந்தது : முதல் பரிசு

தலைப்பு : அருகிலிருக்கும் படத்திற்கான கவிதை

உதிரத்தை உயிராக்கி

நிமிடங்களுக்கு
வேதனைகளை கொடுத்து
இன்பத்தை பெற
காத்திருந்த நாட்கள் முன்னூறு (300).........!

அவள் உயிரைப்
பறிக்கும்
வலியோடு வந்து
விழுந்தேன் மடியில்..........!


என் மூச்சுக்
காற்றின்
வெப்பத்திலும்
தழுவலிலும் எத்தனை
முறை தன்னை
மறந்திருப்பாள்........!

உயிராக்கிய உதிரத்தை
உணவாக
தந்தும் மகிழ்ந்தாள்........!


உச்சி வகுடெடுத்து
உலகிலேயே
அழகென்று
வியந்திருந்தாள்........!

உருண்டோடிப் போன
உலக
வாழ்க்கையில்
உருமாறியும் வழி

மாறியும் இருந்தேன்........!

வழிமாறிப் போன
வாழ்க்கையில்
நான் கண்ட
இன்பங்கள்
பெண்மையினால்............!

உணர்ச்சிகளின்
உச்ச கட்டத்தில்
எனக்கு
இணங்க வைத்தேன்
பணத்தினாலோ
வற்புறுத்தலிலோ.........!

உயிர் கொடுத்தவள்
அன்பாகவும்
அதட்டியும்
எத்தனை முறை
கூறியிருப்பாள்...........!

உணர்ச்சிகளால்
உண்மை
விளங்கவும் இல்லை
விளங்குவதற்கு
முயற்சிக்கவும் இல்லை.......!

காமதேவனின் காலம்
கடந்து
காலதேவனின்
கட்டுபாட்டில் இருந்த
நாட்களில் உணர்ந்தேன்..........!

வற்புறுத்தலில்
வார்த்தைகளை
வீசியவர்களின்
கனவு நனவானது..........!

உயிரை மெதுவாய்
கொல்லும்
நேய் என்னுள்
குடி கொண்டிருந்தது..........!

உறவும்
சமுதாயமும்
பிறக்கணித்தாலும்
உண்மையாய்
உடனிருந்தாள்
உயிர்கொடுத்தவள்........!

மரணத்தின்
வருகைக்கான
நாட்களை
எண்ணி நாட்களை
கடத்தி வருகிறேன்........!

இமை மூடும் சில
தருணங்களில்
இமைகளோடு வந்து
போகும்
பிம்பம்தான் இது...........!

உயிர்தந்து
உருவாக்கியவன்
உயிரற்று போகும்
கணங்களை எண்ணி
கண்ணீரோடு தாய்.......!

நான் செய்த
பாவங்களின் மொத்த
உருவமும் என்னுயிர்
எடுக்க தயாராய்
ஒருவனுமாய் இருப்பதை
காண்கிறேன்..........!
காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் விளையாடிய காலம்

நிகழ்வு : NITTFEST - 2006
பெற்று தந்தது : இரண்டாவது பரிசு

தலைப்பு : சிறகு தொலைத்த தேவதை

அது நிலாக்கள் சுற்றி வரும்
அழகிய கிரகம்.... காற்றிலே சிறகடித்துக் கொண்டிருக்கும்
தேவதைகளின் நகரம்..........

உறக்கமென்பது அங்கே கனவு
காணமட்டும்தான்........ அங்கே கண்ணீர் என்பது காலத்தால் களவாடப்பட்ட
ஒன்று.........

கொஞ்சம் பொறுங்கள்......... ஏதோ
விசும்பல் கேட்கிறது..யாரது? சிதிலமடைந்த சிலந்தி வலையின்
பின்னே..... அழுது சிவந்த கண்களோடு, அழகான ஒரு தேவதை.....

கண்களில் மட்டும் அல்ல, கை
முழுவதும் பெருகிக் கொண்டிருக்கிறது இரத்தம்...........

அவள் சிறகு தொலைத்த கதை
தெரியுமா உங்களுக்கு........? தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்........!



மின்மினி பூச்சியாய் விட்டுவிட்டு
கண்ணடிக்கிறது அந்த
வீட்டு குத்துவிளக்கு..............!

இதற்கு துணையாக
ஒய்யாரமாய் ஓய்வெடுக்கிறது
நான்கைந்து தாம்பூழத்தட்டு.......!

அதிலொன்றில் ஓடிப்பிடித்து
விளையாடும் பூக்கள் சில.......!

கைகோர்த்த நிலையில்
உறவாடும் பூக்கள் சில.......!

இது
மட்டுமா............?

பூக்களும் நடத்துகின்றன
பஞ்சாயத்து மெளனமொழிகளால்..........!

வானவில்லின் வண்ணத்தோடு
வகைவகையான பழங்களுமுண்டு
பூக்களுடன்
ஓரக்கண்ணால் பேசியபடி........!

பேச்சின் வெட்கத்தில்
தலைகுனிந்தும் சிலபூக்கள்..........!

இந்த பெரியவர்களுக்கு இணையாக
கறை இருந்தாலும் கறைபடியாத
வெள்ளை வேட்டியில் சிலர்.........!

தள்ளாடும் தலைகளுக்கு நடுவே
பாதி தளர்ந்த தலை ஒன்று
எட்டி பார்த்தது கோட்டுசூட்டோடு...!

கற்பூரமாய் காலம்
கரைந்து கொண்டிருக்க
கடிவாளமில்ல குதிரைபோல்
காற்றென பறந்து வந்தாள்
தேவதை ஒருத்தி..........!

சூரியனே
அவள்தான் என நினைப்பு......!
ஆனாலும் மெதுவாய்
எட்டிபார்க்கும் இருட்டு..........!

நகலென வந்தவள்
நாட்டியமாடிக்கொண்டிருக்க
அசலாய் இருந்தவள்
அடியெடுத்து வைத்தாள்
கையில் தேநீர் கோப்பைகளோடு.........!

எத்தனைமுறை செய்திருப்பாள்......
இன்றாவது கடைசியாகுமா.............?

நடை பழகும் மழலையாய்
நளினமென நடந்து வந்தாள்....!

கூட்டை விட்டு எட்டிப்பார்க்கும்
நத்தையாய் அவளையும்
விட்டுச் சென்றது கருவிழிப்பார்வை.....!

அவளின் தேவதை
விண்ணுக்கும் மண்ணுக்குமாய்
பாலம் கட்டிக்கொண்டிருந்தாள்....!

காலம்
நிமிடங்களை விழுங்கிக்கொண்டிருக்க
உற்சாகமாய் ஆரம்பித்தாள்
எவ்வளவு போடுவீர்கள் என்று..........!

பாலம் கட்டிக்கொண்டிருந்தவள்
தரை இறங்கிய விமானம்போல்
அமைதியாய் நின்றாள்.....!

கடந்து சென்ற பார்வை திரும்ப
வந்து பதில்திசை தேடிஓடியது....!

பதிலை கேட்டுவிட்டு
அவளின் இறகுகளுக்கு
குறிபார்த்து குறிப்பெடுத்தாள்
ஒருத்தி.........!

பாதி வயதை கடந்தவளுக்கு
பாதை ஏது என்றாள்.......?
ஆஹா எவ்வளவு அழகானகுறி......!

குறிப்பெடுத்தது என்னவோ
ஒரு இறகுக்குதான்
வீழ்ந்தது இரண்டாயின............!

குருதி அங்கே
குமுறிக் கொண்டிருக்க
குடிசையாயில்லை
என்று கூறி
கூட்டம் கலைந்தது......!

பூக்களெல்லாம் தீக்குளிக்க
சிறகிழந்த தேவதையும்
குமுறுகிறாள் குருதியோடு.....!

நகலோ குமுறுகிறாள்
ஆனால் அசலோ
அசைவற்று கிடக்கிறாள்....!

நித்தம் நித்தம்
சிறகொடிக்கப்படும்
தேவதைகள்தான் எத்தனை
என்றாவது ஒட்ட
வைத்திருப்போமா...?
சிறகினை.....
சிந்திப்போம்............



காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் விளையாடிய காலம்

நிகழ்வு : NITTFEST - 2006
பெற்று தந்தது : இரண்டாவது பரிசு

தலைப்பு : அருகிலிருக்கும் படத்திற்கான கவிதை



வெற்றியின் மோகம் கொண்டு
வீரம் இழப்பவனே......!

எடுத்துவைப்பது
வெற்றிப்படிகளல்ல......
வீழ்ச்சிப்படிகளே..........!

மனசாட்சியே மந்திரமாய்
உரைப்பது உணரவில்லையா.......?
இல்லை....

குருதி கொண்டு
கதறி அழும்
தாய்மையின் குரல்
எட்டவில்லையா......?
உன் செவிகளில்.....!

சற்றே நிமிர்ந்து பார்..
சாதனையை உன்னுள் விதைத்தாலும்
சிரம் தளர்ந்து சரிகிறாளே ஒருத்தி..

சரிவது
அவள் மட்டுமல்ல..

வெற்றியே ஆனாலும்
தோல்வியே ஆனாலும்
சரிபவளும் சரிபவர்களுமாய் பலர்.....

வெற்றியும் தோல்விதான் ஒருவனுக்கு
ஏனென்று தெரியுமா.........?
உதிர்வது
உதிரங்கள் மட்டுமல்ல.........
உண்மைகளும் கொஞ்சம்.....!
காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் விளையாடிய காலம்

நிகழ்வு :
NITTFEST - 2006 பெற்று தந்தது : இரண்டாவது பரிசு

தலைப்பு : கடவுளைக் கைதுசெய்

" பழங்கள் மட்டுமா உதிர்க்கப்படுகின்றன
பிஞ்சுகளுமல்லவா உதிர்க்கப்படுகின்றன......!

பற்றில்லை என்று கூறி
பற்றை மட்டுமே விதைக்கிறாய்.....!

வளர்வது மரங்களல்ல...........
மனிதர்கள்..

சாயமேற்றப்படுவது போல்
நஞ்சு கலக்கப்படுகிறது நாணல்களில்....

ளைந்து மட்டுமா கொடுக்கிறது.
வளைத்தும் கொடுக்கிறது நஞ்சினை....

வாய்ப்புகளை விட வழுக்கல்களே
எங்கும் நிறைந்துள்ளன......

வழுக்கி எழுந்தாலும் கிடைப்பது
உண்மைகளல்ல வடுக்களே.....

இறைவா இப்போதாவது புரிகிறதா..
இல்லை இல்லை தெரிகிறதா..
உன் பகல் வே ஷம்.....

வே ஷம்கலைக்கும் தருணங்களை
தருவிக்கவே கைது செய்கிறேன்..

ஏன்
தெரியுமா.............?

குற்றம் செய்தவனைவிட
தூண்டுபவனே முதல் குற்றவாளி
அதனால் நீதான் முதல் குற்றவாளி....."
காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் விளையாடிய காலம்

நிகழ்வு :
NITTFEST - 2006 பெற்று தந்தது : இரண்டாவது பரிசு

தலைப்பு :


இவர்கள் தனிமையில் தங்களைத் தொலைத்தவர்கள்............ படுக்கை தலையணை போல இவர்களும் ஒரு பொருள்தான் பலர் பார்வயில். விளக்கேற்ற யாருமில்லை விளக்கணைக்கவே ஆர்வம் பலருக்கு ............ ஆசை அறவே இல்லை மோகம் மட்டுமே முப்பது நாட்களும். ஆடைகள் இவர்களுக்கு வெறும்
அலங்காரப் பொருட்கள்தான்............. வாழ்க்கை கிடைக்காத இவர்களுக்கு உங்கள் வார்த்தைகளாவது கிடைக்கட்டும்.......................

"நாங்களும் கண்ணகிகள்தான் ஆனால்
ராவணர்களை மட்டுமே தெரிந்தவர்கள்

நாங்களும் தாரம் ஆகிறோம்

தாழ்ப்ப்பாள் போடப்படும் போது....
ஆச்சரியம் தாழ்ப்ப்பாள் திறப்பதே இல்லை..........!

விட்டில் பூச்சிகளைப் போல்
எப்போதாவது விடியும் பொழுதுகள்

சூரியனைத் தேடுகிறோம்
கிடைப்பதெல்லாம்
அமாவசைகள் மட்டுமே.......

புத்தனுக்கு ஞானம் போதிமரம்
எங்களுக்கு ஞானம் இருள்

போதிமர ஞானம் பொய்யாகிப்போனது
இருள் ஞானம் இறவாமல் உள்ளது

ஆசையும் உண்டு எங்களுக்கல்ல.........?
எங்களை மீட்டுபவர்களுக்கு ....
அதுமட்டுமா.................?

எங்களை மீட்கவும் ஆசையுண்டு
எங்கள் தெய்வங்களுக்கு
தெய்வங்கள் கடைசியில்தானே ஜெயிக்கும்
இதனால்தான் எங்கள் தெய்வங்கள்
எப்போதும் கடைசியை நோக்கி.......

தெய்வங்களுக்கு உண்டு அர்ச்சனைகள்
ஆனால் எங்களுக்கு.....................?
அர்ச்சனைகளே நாங்கள் தான்....

அர்ச்சனைகள் முடிந்தால்
அரை வயிறாவது நிரையும்
இதோ அடுத்த அரை வயிறாவது
காலியாகிவிட்டது....

கவலையும் இல்லை
அர்ச்சனையும் தயாராகிவிட்டது....

அவன் படைத்த வயிறு
நிரம்பப் போவதும் இல்லை
அர்ச்சனைகள் அறியாதவர்களும் இல்லை.....!

எதற்கும் எல்லை உண்டு
ஆனால் எங்கள் இளமைக்கு.............
முடிவுகள் உங்கள் கைகளில்.................!"

தேடல்


பிளந்துபோன இதயத்தில்
வார்த்தைகள்..........
இங்கொன்றும் அங்கொன்றுமாய்........!

பிளவிற்கு காரணம்
என்னவோ.............?

நட்பென்றால்
கவலையில்லை..........!

காதலென்றால்..............
எங்கே தேட..........?

உங்களிடமிருந்தால்...
கொடுத்து விடுங்களேன்...........!

கடவுள்



நிழல்களை நிஜங்களாக்கவும்
நிஜங்களை நிழல்களாக்கவும் அறிந்தவனே...........!

உந்தன் விளையாட்டுப் பொருளாய் எம்மை
படைத்து விளையாட விடுபவனே.........!

எம்மை அறிந்தால் உம்மை
அறிய முடியும் என்பதை....
உணர்வில்லாமல் உணர்த்துபவனே.................!

உன்னை அறிந்ததை உணர்த்தாமல்
எம்மையும் உணர்விழக்கச் செய்பவனே..........!

உன்னை வணங்குகிறேன்
ஆனால்............?

உன்னை உணர்வதற்காக அல்ல.............!
என்னை உணர்வதற்காகவே.............!

காணிக்கை


உன் நினைவுகளால் உறங்கிப்போன
எனக்கு கனவுகள்
மட்டும் காணிக்கையா...?

புதுப்பிக்கப்பட்ட உறவுகள்


விடலைப் பருவத்து நாட்களில்
பாதை புரியாமலும் தெரியாமலும்
பயணிக்கும் பள்ளிப் பருவத்தில்
இணைந்திருந்த மலர்கள் நாங்கள்..........................!

பாதையை புரிய வைக்கும்
நோக்கத்தில் விதித்திருந்த
கட்டுப்பாட்டில் பாலின ரீதியாக
பிரிக்கப்பட்டவர்களானோம்........................!

இதயங்களில்
ஏக்கங்களோடு..........!

முகவரி இல்லா பறவைகளைப்போல்
நாங்களும் சில வருடங்களை
வீணாக்கினோம்.........!

இரைதேடும் பறவையாய்
நானிங்கு அலைந்து கொண்டிருந்தேன்
முகவரிகளுக்காக...............!

வருடங்களை விழுங்கி
வசந்தத்தை கொண்டுவந்தது
சில முகவரிகள்.............!

முகவரிகளின் பரிமாற்றத்தில்
சோலைவனமாயின என்மனம்....

பரிமாறிக் கொண்டவர்களின்
மனமும் அப்படித்தானே.................?

துவண்டு போகும் தருணங்களில்
தோள் தந்து துணைநிற்கும்
முகவரிகளை மறைத்ததற்காக
வஞ்சம் இறைவன் மீது
கொண்டாலும் காலம்
கடந்து திருப்பி தந்ததற்காக
வணங்குகிறேன் மனதார அவனை...............!

முகவரிகளின் பறிமாற்றாங்கள்
பயணிக்குமா..........................?

நிமிடங்களில்லா நாட்கள் என
காரணம் காட்டி..
பரிமாற்றுப்பயணம் முடிந்துபோகுமா...................?

விடகளைப்பெறுவோம்
காலதேவனின்
நாட்குறிப்பேட்டிலிருந்து......................!

அதிகாலைப்பொழுதுகள்

உன் நினைவுகளோடு
திறக்கும் விழிகளுக்கு

ஜோதிதரிசனமாய்
உன்முகம் காட்டி

நிமிடங்களை
நிஜங்களாக்கி

நல்வழிப்படுத்துவாய் எனும்
நம்பிக்கையில்

தினமும்
உதயமாகிறது

என்
அதிகாலைப்பொழுதுகள்.............!

கல்விக்கூடம்


என்னால் அறிய முடியாத ஒருவனை
என்னுள் இருந்து எனக்கு காட்டும்
வழிகாட்டியாய் கல்விக்கூடம்

கடவுளும் மனிதனும்


உன்காதலுக்கு சுயம்வரம்
என் காதலுக்கு ஊர்வலம்

உன் சந்திப்பின் தொடக்கம்
மணவரையிலிருந்து............!


என் சந்திப்பின் தொடக்கம்
கல்லறையிலிருந்து............!

ஏனெனில் நீ இறைவன்
நான் மனிதன்.........!

தீண்டாமை


நித்தமும்
உன் நினைவுகளோடு........!

ஆனால் நிஜத்தில்
எனைவிட்டு விலகியே.............!

நான் என்ன
தீண்டத்தகாதவனா......?

நீ விலகிச்செல்வதற்கு........!

உன் தீண்டல் இல்லாவிடினும்
வார்த்தைகளாவது வந்து
சேராதா...... எனைத்தேடி

விடை காண முயலும் தோல்விகள்


ஆசைகளின் நடுவே
சிக்கிக் கொண்ட ஆறறிவு
மிருகம் நான்...................!

ஆசையை அடிமையாக்க
அடுத்த நிலையில்
தடம் பதிக்க
பயணமானேன் பாதையில்............!

பயணமான பாதை
சரியானதாய் இருந்தாலும்
சேருமிடம் அறியாமல்.................!
வெறுமையாய் திரும்பினேன்
பயணத்தின் முடிவை எட்டாமல்............!

மனமெங்கும் சோக அலைகளோடு
சேருமிடம் தெளிவில்லாமல்
பயணித்ததன் தண்டனையா
நான் பெற்ற வேதனைகள்......................?

வார்த்தைகளின் சோகங்கள்


கூடு தேடும் பறவையை போல்
உன் நினைவுகளின் தடம்தேடி
நித்தம் நித்தம்
தேடி அலைகிறேன்.............!

வாங்கிய கடனுக்கு வட்டியை
செலுத்தும் கடனாளியைப் போல்
வார்த்தைகள் மட்டும்
உதிர்த்து போகிறாய் உயிரற்றதாய்................!

நினைவை கொண்டு நிஜத்தை
தேடி அலையும் எனக்கு
நிஜம் மட்டுமல்ல
நினைவுகள்கூட சொந்தமில்லை
என்று கூறிச்செல்ல
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது.............?

உதிர்ந்த வார்த்தைகள் காற்றோடு
கைகோர்த்து காணாமல் போனதா.................?

இல்லை காலத்தை கடத்துவதற்காக
கூறப்பட்டதாய் எண்ணி
உன்னுடனே வந்து சேர்ந்ததா......................?