உன் வார்த்தைகள்

சிறகு உதிர்ந்த ஈசலைப்போல்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் உன்
மௌன மொழிகளால்....

மீண்டும் சிறகுகள் முளைக்கும்
உன் மௌனம் எனக்கு
சம்மதமாக அமையுமென்றால்..........!

நான் பார்த்த ஒரு குழந்தை


எங்கே கற்றுக்கொண்டாய்
எங்களை மகிழ்விக்கும் மந்திரத்தை........

நீ பார்த்த ஒரு கணம்....
எனக்கு ஒரு யுகமாய் நினைவுகள்....

உன் மொழியை புரிந்து கொள்ள
நான் யாரிடம் பாடம் கற்க....?
உன்னிடமேவா......?

உன் விரல் தீண்டிய அந்த நொடி
நான் என்ன மோட்சம் பெற்றேனா......?
என்னுள் அப்படி ஒரு ஆனந்தம்......!

உன்னிடமிருக்கும் சந்தோசத்தை
விட்டுவிட்டு எங்கேயோ
தேடிக்கொண்டிருக்கிறோம்.............

அர்ப்பணிப்பு


என் நலம் வேண்டி கடவுளின் காலடியில்
நித்தம் தொழுபவள் நீ....!

உன் நலம் வேண்டி என்றாவது
ஒரு நாள் தொழுதிருப்பேன்...!

உனை பார்த்து கற்றுக்கொண்ட என்னால்
முடியவில்லை நித்தமும் தொழ
உனக்காக.....!

யாரையும் பார்த்து கற்றுக்கொள்ளாத
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது...?
நித்தமும்
எனக்காக தொழ...

இதனால்தானோ உன்னை
நடமாடும் தெய்வம் என்கிறார்கள்..

காரணங்களை நீ மட்டுமே அறிவாய்.....!

கண்ணீர்


உன்னிடமிருந்து விடைபெறும்
ஒவ்வொரு தருணங்களிலும் இருவரின்
கடைக்கண்களில் எட்டிப்பார்க்கிறாள் ஒருத்தி....!

கவிதை

வாழ்க்கையின் உயரங்களைத் தேடி
பூக்களின் சாலையில்

தவறி விழுந்து பெற்ற
வடுக்களின் வலிகள்

சொட்டிய குருதியின் சற்றே
வெளுத்து சிவந்த காயங்களோடு...

கதைகள் இல்லை...இல்லை...
கதைகளல்ல காவியங்கள்
கவிதைகளாய்........!

காலம்

வாசனையை நுகர
முயன்ற பொழுதுகளெல்லாம்
மொட்டுகளாய் மௌனம் சாதித்தாய்....!

வாசனையோடு பூத்துக் குலுங்கியபூது..
நுகர உரிமம் இல்லாதவனாய் நான்...!

சில தருணங்கள்


நித்தம் நித்தம்
வந்துபோகிறாய்
நினைவுகளில்.........!

காரணங்கள் மட்டும்
புரியவில்லை......!

உன் வார்த்தைகளை புரிந்து
கொள்ள முடியாமல்
மதில்மேல் பூனையாய் நான்....!

ஆனாலும் என்னுள் ஒருபயம்
விட்டுவிட்டு எட்டிப்பார்க்கிறது
கடமைகளை
மறந்துவிடுவேனோ என்று...?

இந்தப் போராட்டங்கள்
உன்னுள்ளும்
நிகழ்கிறதா.....?

ஆம் என்றால் உன்
வார்த்தைகள் என்
வாழ்வின் ஒளிக்கீற்றுகள்...!

இல்லையெனில் அவை
இடரவைக்கும்
இருளின் பாதைகள்...!

என்னவளே உனக்கு
ஒரு வேண்டுகோள்....!

என்னைக்குழப்பும்
உன் சந்தோக்ஷத்தை
மட்டும் விட்டுவிடு
எனக்காக......!

ஏனெனில் நானிங்கு கலவரபூமியாய்
ஆனால் நீஅங்கு...........?

கருவறை

உன் நினைவுகள் என்னுள்
தோன்றும் பொழுதெல்லாம்..
எனக்கே தெரியாமல் என்
கவலைகளும் சோகமும் மறைந்து
சந்தோசம் ஒளிவீசத் தொடங்குகிறது...!

ஏன்..?
உன் நினைவுகளுக்கு
மட்டும் இப்படி ஒருசக்தி..!

காரணங்கள்
மட்டும் புரியவில்லை......!

இருந்தாலும்
ஒன்று மட்டும் புரிகிறது....!

உந்தன் கருவறையில் நானிருந்ததால்
உன் நினைவுகள் என்னை
சந்தோக்ஷப்படுத்துகிறது என்பது...!

கஜினி திரைப்படத்தை பார்த்தபிறகு

பாசத்தில்
என் தாயாக.....!

அழகில்
நிலவும் பொறமைப்படும்படியாக...!

அவளது உலகம்
எனக்காக என்று எண்ணுபவளாகவும்.....!

எனது உலகமும்
அவளுக்காக என்று எண்ணவைப்பவளுமாக..!

எனக்காக எதையும் கொடுப்பவளாய்...
அவளுக்காகவே நான் பிறந்துள்ளேன்
என்று எண்ண்வைப்பவள்....
அவள் ஒருத்திக்காக காத்துகிடக்கிறேன்....!

அப்படி ஒருவளை எனக்காக
இறைவன் கொடுப்பான்
என்ற நம்பிக்கையில்......!

மழைக்கால நினைவுகள்


இறைவனின் குழந்தைகளாய்
பூமியை அடைபவளே...!

சில்லென்று வீசும் காற்றால்
அழைக்கழிக்கப்பட்டு ஜன்னலை
தீண்டும்போது நானும் உன்னை
தழுவினேன் உன்மீது
காதல் கொண்டு.....!

உன் இதமான தீண்டலில்
நான் பின்னோக்கி பயணித்தேன்...

அரைகால் டவுசருடன் புயலாய்
வீட்டில் நுழைந்தோம் இருவரும்..
ஏனெனில் என்வீடு உன்னையும்
வரவேற்க தயாராய் இருந்தது
வறுமையால் உடைந்துபோன கூரைகளாக..!

சந்தோசமாக வீட்டுக்குள்
நுழைந்த உன்னை வெறுக்கவே
செய்தாள் என் தாய்...!

பாழாய்ப்போன வீட்டிற்கு
எப்பொதுதான் விடிவோ...?
முணுமுணுப்போடு பாத்திரங்களை
வைக்கிறாள் நீநுழைந்த இடத்தில்..
அதில் கொஞ்சம்பங்கு எனக்கும்...!

உனது ஒய்யார ஆட்டம் நின்றபின்
உன்னை எடுத்துப் பார்த்து
போற்றுகிறாள் உன்
தூய்மையின் குணம் கண்டு..!

சந்தோசமாய் வந்தவள் சற்று
சிரமும் கொடுத்தாய்...ஆனால்
போகும்போது சந்தோசம்
மட்டுமல்ல உதவியும் செய்தாய்...!

சந்தோசம் எனக்கு உன்னை
கொண்டுவரும் வேலை இல்லை..
சந்தோசம் என் தாய்க்கு
அமிர்தமாகிய உன் சுவையால்..!

இந்த இன்பத்திற்காகவே வேண்டுகிறேன்
இறைவனை உந்தன் வருகயை
சற்று அதிகப்படுத்த.....!

விந்தையானவள் ( தாய் )

எனக்காகவே படைக்கப்பட்ட
இறைவனின் படைப்பு அவள்...!

அன்பை மட்டும் அள்ளித்தரும்
அட்சய பாத்திரம் அவள்...!

தரும் அன்பை திரும்ப
கேட்கவோ வாங்கவோ ஏன்

எதிர்பார்(க்க)ப்பதற்கு கூட தெரியாத
களங்கமற்ற தேவதை அவள்....!

நினைவுகள் மட்டுமல்ல..
சொட்டும் வியர்வை கூட என்

பெயர் சொல்லுமளவிற்கு நினைவுகள்
உந்தன் நெஞ்சில் ஆனால்.....

நானோ உன்னை மறந்து
காதல் என்ற பெயரில்

எவளோ ஒருத்தியின் நினைவுகளோடு..!
இறைவா எனை செதுக்கும்

தேவதையின் நினைவுகளை என்
குருதியில் கலப்பயாக....!