தருணம் : என்னோடு பணியாற்றும் சக நண்பரின் திருமண நாள் பற்றி ..

கவிதை நடை : கவிதையின் பாதி வரை நண்பர் தன் மனைவிக்கு எழுதியதாகவும் , மீதி பாதி நான் அவர்களுக்கு எழுதியதாகவும்.

குயில் கூவும் அதிகாலைப் பொழுது ,
பனித் துளிகள் புற்களோடு
காதல் வயப்பட்ட தருணங்கள்.

அம்மி மிதித்து ,
அருந்ததி பார்த்து ,
மாங்கல்யம் சூடி ,
மணவாழ்க்கை ஆரம்பமானது
நம் இருவருக்கும்.

பசுமையான நினைவுகள்
மனமெங்கும் ..
ஆனால் காலம் சில
வருடங்களை விழுங்கியிருந்தது
நமக்கு தெரியாமலே....!

கடலில் மூழ்கியவன்
முத்தெடுப்பான்..
உயிரெனும் முத்தெடுத்தோம்
மணவாழ்க்கையில் மூழ்கி.

மூங்கிலாய் நான் ,
காற்றாய் நீ ,
அதில் ஊற்றெடுக்கும் ராகங்களாய்
நம் குழந்தைகள்...

காலங்கள் பல கடந்தாலும்
நினைத்துப் பார்க்கும்
தருணங்கள் எல்லாம் ,
பெற்ற வலிகள்
பாடங்களாய் மாறி ,
சந்தோஷங்கள் தலைத்தோங்க
நாம் செய்ய வேண்டியதெல்லாம்
மனம் விட்டு பேச சில
நிமிடங்கள் மட்டுமே ....!

உணர்வு பரிமாற்றத்தில்
மட்டுமல்ல...
உறவுப் பரிமாற்றத்திலும்
உங்களுக்கு நிகர் நீங்களே என்று
உலகம் உங்களை
போற்றும் தருணங்களுக்காக
வாழ வேண்டுமென்று
வாழ்த்துவதோடு,

தவம் செய்வார்கள்
உங்களை பெற்றோராய்ப் பெற.....
தவம் செய்தீர்கள்
அவர்களை குழந்தைகளாய்ப் பெற..!

உணர்வொத்த தம்பதிகளாய்,
வாழையடி வாழையென
வசந்தங்கள்
தழைத்தோங்க, இறைவனை
வேண்டி வாழ்த்தி ,
வணங்குகிறேன்.

No comments: