காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் விளையாடிய காலம்

நிகழ்வு : NITTFEST - 2006
பெற்று தந்தது : இரண்டாவது பரிசு

தலைப்பு : சிறகு தொலைத்த தேவதை

அது நிலாக்கள் சுற்றி வரும்
அழகிய கிரகம்.... காற்றிலே சிறகடித்துக் கொண்டிருக்கும்
தேவதைகளின் நகரம்..........

உறக்கமென்பது அங்கே கனவு
காணமட்டும்தான்........ அங்கே கண்ணீர் என்பது காலத்தால் களவாடப்பட்ட
ஒன்று.........

கொஞ்சம் பொறுங்கள்......... ஏதோ
விசும்பல் கேட்கிறது..யாரது? சிதிலமடைந்த சிலந்தி வலையின்
பின்னே..... அழுது சிவந்த கண்களோடு, அழகான ஒரு தேவதை.....

கண்களில் மட்டும் அல்ல, கை
முழுவதும் பெருகிக் கொண்டிருக்கிறது இரத்தம்...........

அவள் சிறகு தொலைத்த கதை
தெரியுமா உங்களுக்கு........? தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்........!



மின்மினி பூச்சியாய் விட்டுவிட்டு
கண்ணடிக்கிறது அந்த
வீட்டு குத்துவிளக்கு..............!

இதற்கு துணையாக
ஒய்யாரமாய் ஓய்வெடுக்கிறது
நான்கைந்து தாம்பூழத்தட்டு.......!

அதிலொன்றில் ஓடிப்பிடித்து
விளையாடும் பூக்கள் சில.......!

கைகோர்த்த நிலையில்
உறவாடும் பூக்கள் சில.......!

இது
மட்டுமா............?

பூக்களும் நடத்துகின்றன
பஞ்சாயத்து மெளனமொழிகளால்..........!

வானவில்லின் வண்ணத்தோடு
வகைவகையான பழங்களுமுண்டு
பூக்களுடன்
ஓரக்கண்ணால் பேசியபடி........!

பேச்சின் வெட்கத்தில்
தலைகுனிந்தும் சிலபூக்கள்..........!

இந்த பெரியவர்களுக்கு இணையாக
கறை இருந்தாலும் கறைபடியாத
வெள்ளை வேட்டியில் சிலர்.........!

தள்ளாடும் தலைகளுக்கு நடுவே
பாதி தளர்ந்த தலை ஒன்று
எட்டி பார்த்தது கோட்டுசூட்டோடு...!

கற்பூரமாய் காலம்
கரைந்து கொண்டிருக்க
கடிவாளமில்ல குதிரைபோல்
காற்றென பறந்து வந்தாள்
தேவதை ஒருத்தி..........!

சூரியனே
அவள்தான் என நினைப்பு......!
ஆனாலும் மெதுவாய்
எட்டிபார்க்கும் இருட்டு..........!

நகலென வந்தவள்
நாட்டியமாடிக்கொண்டிருக்க
அசலாய் இருந்தவள்
அடியெடுத்து வைத்தாள்
கையில் தேநீர் கோப்பைகளோடு.........!

எத்தனைமுறை செய்திருப்பாள்......
இன்றாவது கடைசியாகுமா.............?

நடை பழகும் மழலையாய்
நளினமென நடந்து வந்தாள்....!

கூட்டை விட்டு எட்டிப்பார்க்கும்
நத்தையாய் அவளையும்
விட்டுச் சென்றது கருவிழிப்பார்வை.....!

அவளின் தேவதை
விண்ணுக்கும் மண்ணுக்குமாய்
பாலம் கட்டிக்கொண்டிருந்தாள்....!

காலம்
நிமிடங்களை விழுங்கிக்கொண்டிருக்க
உற்சாகமாய் ஆரம்பித்தாள்
எவ்வளவு போடுவீர்கள் என்று..........!

பாலம் கட்டிக்கொண்டிருந்தவள்
தரை இறங்கிய விமானம்போல்
அமைதியாய் நின்றாள்.....!

கடந்து சென்ற பார்வை திரும்ப
வந்து பதில்திசை தேடிஓடியது....!

பதிலை கேட்டுவிட்டு
அவளின் இறகுகளுக்கு
குறிபார்த்து குறிப்பெடுத்தாள்
ஒருத்தி.........!

பாதி வயதை கடந்தவளுக்கு
பாதை ஏது என்றாள்.......?
ஆஹா எவ்வளவு அழகானகுறி......!

குறிப்பெடுத்தது என்னவோ
ஒரு இறகுக்குதான்
வீழ்ந்தது இரண்டாயின............!

குருதி அங்கே
குமுறிக் கொண்டிருக்க
குடிசையாயில்லை
என்று கூறி
கூட்டம் கலைந்தது......!

பூக்களெல்லாம் தீக்குளிக்க
சிறகிழந்த தேவதையும்
குமுறுகிறாள் குருதியோடு.....!

நகலோ குமுறுகிறாள்
ஆனால் அசலோ
அசைவற்று கிடக்கிறாள்....!

நித்தம் நித்தம்
சிறகொடிக்கப்படும்
தேவதைகள்தான் எத்தனை
என்றாவது ஒட்ட
வைத்திருப்போமா...?
சிறகினை.....
சிந்திப்போம்............



1 comment:

Bee'morgan said...

கடந்து போன வசந்த காலத்தின் நினைவுகளாய், என்றோ படித்த இந்த வரிகள் மீண்டும் மனதினுள் நிழலாடுகின்றன.. கால இடைவெளிகளில் ஒரே வரிகள் கூட வெவ்வேறு உருக்கொள்ளும் என்று இப்போது புரிகிறது.. அதே நெருக்கமும் இயல்புமாக முற்றிலும் புதிதாகத் தெரிகிறது இன்றும்.. நல்லதொரு பதிவு..